வெள்ளி, 15 மார்ச், 2013

சூனியம் செய்தால் ஏன் தண்டனை?

சூனியம் என்பது வெறும் கண் கட்டி வித்தை என்று தான் குர் ஆன் கூறுகிறது என்பதை நாம் விளக்கும் போது சில அதிமேதாவிகள், அதற்கு குர் ஆன் ஹதீஸில் இருந்து பதில் சொல்லி மறுப்பதை விட்டு விட்டு, அப்படியானால் கலிபாக்கள் ஆட்சியில் சூனியம் செய்தவருக்கு மரண தண்டனை ஏன் கொடுக்கபடுகிறது? என்கிற உலக மகா கேள்வியை கேட்கின்றனர்.

ஒரு சிலர் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்வார்கள் தெளிவு கிடைத்ததும் நிலையை மாற்றிக்கொள்வார்கள்.

அதே சமயம் இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களிடம் ஒரு விஷயத்தை தெளிவாக்கி விட்ட பிறகும், அந்த தெளிவு அவர்களுக்கு கிடைத்த பின்னரும், வேறு எதை கேட்டு இதை பொய்ப்பிக்க முடியும் என்று சிந்திப்பதே அவர்களது வாடிக்கையாக இருக்கும். அதாவது, ஒன்றை பொய் என்று சொல்வதையே இலக்காக கொண்டு அதற்கு எதிராக எத்தனை உண்மைகள் வந்தாலும் காது கொடுக்காமல் இருப்பது சிலரின் குணம்.
இது குணம் என்று சொல்வதை விட இது ஒரு நோய்.

சூனியம் என்பது அற்புத சக்தியல்ல, அது மனித சக்திக்கு அப்பாற்ப்பட்ட ஒன்று என்று குர் ஆன் எங்குமே சொல்லவில்லை என்று நாம் சொல்லும் போது அதை மறுப்பவர்களின் அடிப்படை கடமை என்ன?? இல்லை நீங்கள் தவறாக சொல்கிறீர்கள், இதோ இந்த வசனத்தில் அது மனித சக்திக்கு அப்பாற்ப்பட்ட சக்தியாக கூறப்படுகிறது என்று எடுத்துக்காட்ட வேண்டும்.

சூனியம் என்பது பொய் புரட்டு என்ற போதிலும் அதை செய்தால் பெரும் பாவம் என்று அல்லாஹ் 2:102 வசனத்தில் சொல்கிறான். அதை இறை நிராகரிப்பு என்கிறான். வெறும் பொய்யையும் பித்தலாட்டத்தையும் செய்வது எப்படி இறை நிராகரிப்பு ஆகிறது என்றால் அந்த பொய்யை வெறும் பொய் என்று சொல்லாமல் மனித சக்திக்கு அப்பாற்ப்பட்ட ஒரு விஷயமாக காட்டுவார்கள், எப்போது மனிதன் செய்யும் ஒரு காரியம் அல்லாஹ்வின் தன்மைக்கு சமமாக காட்டப்படுகிறதோ அது பொய்,அவ்வாறு காட்டுபவர் அல்லாஹ்வை மறுப்பவர், அவ்வாறு செய்து காட்டுபவரை உண்மையாளர் என்று நம்புவது அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயல் !!!

இது தான் விஷயம்.

உதாரணமாக, சாய் பாபா வாய்க்குள் மோதிரத்தை எடுத்து காட்டுகிறான். அது மாஜிக் என்று சொல்லி அவன் செய்திருந்தால் அது தவறல்ல, அது பாவமான காரியமல்ல.அதை யாரும் விமர்சனமும் செய்ய மாட்டோம். ஆனால் தான் சூனியம் செய்வதாக சொல்லி, இல்லாததை இருப்பது போல காட்ட அவன் முயற்சி செய்கிறான். அதன் மூலம் தான் கடவுளின் அவதாரம் என்று மக்கள் நம்பி விட வேண்டும் என்பதற்காக அதை செய்கிறான் எனும் போது அல்லாஹ்வின் தன்மைக்கு இவன் சொந்தம் கொண்டாடுகிறான் என்று ஆகிறது. அவன் வாயில் இருந்து மோதிரம் எடுத்தது அற்புத சக்தி என்று யாரெல்லாம் நம்பினார்களோ அவர்கள் இறைவனுக்கு இணை வைத்த மகா பாவிகள். அதை தூண்டிய சாய் பாபா ஒரு இறை மறுப்பாளன்.

சூனியத்தை பொய் என்று சொல்லி செய்தால் பாவமல்ல, சூனியத்தை உண்மை என்று சொல்லி செய்தால் அது தான் பாவம்.
இந்த வேறுபாட்டை புரிந்து கொண்டால் குழப்பமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக