வெள்ளி, 12 ஜூலை, 2013

அல்லாஹ்வின் ஆற்றல் : இப்ராஹிம் நபியின் வழிமுறை


சூனியம் உண்டு என்று சொல்கிற உங்களால் எனக்கு சூனியம் வைக்க முடியுமா? என்று நாம் கேள்வி எழுப்புகிற போது சூனியம் என்பது பாவமான காரியம், ஆகவே அதை செய்து காட்டும் படி கேட்க கூடாது என்கிற ஒரு சமாளிப்பு பதிலை கூறி தப்பிக்கின்றனர்.

ஆனால், இது போன்ற கேள்விகள் கேட்பது தான் மார்க்கத்திற்கு உட்பட்டது, பொய்யர்களை அடையாளம் காட்டவல்லது ! குர்ஆன் காட்டும் வழிமுறையே இது தான் !

இப்ராஹிம் நபியுடன், உன் இறைவன் உயிர் கொடுப்பதை போல எங்களாலும் கொடுக்க முடியும் என்றெல்லாம் விதண்டாவாதம் செய்து வந்த அந்த இணை வைப்பாளர்களை நோக்கி, அத்தகைய இணை வைப்பு செயல் ஒன்றை செய்து காட்டி தங்களுக்கும் இறை சக்தி இருக்கிறது என்று நிரூபிக்குமாறு இப்ராஹிம் நபி அவர்களை நோக்கி சவால் விடுக்கிறார்கள்.

இதை அல்லாஹ் கீழ்காணும் வசனத்தில் சொல்கிறான்

'அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (2:258)

சூரியனை மேற்கில் உதிக்க செய்யும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு தான் உண்டு. அதை உளப்பூர்வமாக நம்பிய இப்ராஹிம் நபி, அல்லாஹ்வை போல் தனக்கும் ஆற்றல்கள் உள்ளதாக பிதற்றியவனை நோக்கி, அப்படியானால் அல்லாஹ்வின் இந்த ஆற்றலை நீ வெளிகாட்டு பார்க்கலாம் என்று கேட்கிறார்கள்.
இவ்வாறு கேட்பதை அல்லாஹ் அங்கீகரிக்கிறான் !

இதே போல, எந்த சாதனமுமின்றி இன்னொருவனது கை கால்களை முடமாக்க முடியும் என்று நம்புவதும் அல்லாஹ்வின் ஆற்றலில் சொந்தம் கொண்டாடுவது தான் என்கிற வகையில், இப்ராஹிம் நபி பாணியில், நீ உண்மையாளன் என்றால் அதை செய்து காட்டு பார்ப்போம் என்று கேட்கலாம் !

மேலும், இப்ராஹிம் நபி அவ்வாறு கேட்ட உடன், அதை செய்து காட்டி நிரூபிக்க வக்கற்ற அந்த எதிரிகள் வாயடைத்து போனதாக அல்லாஹ் அதே வசனத்தில் சொல்கிறான்.
அதாவது, இப்ராஹிம் நபி கேட்டதை போல அவர்கள் செய்து காட்டவில்லை என்பதால் அவர்கள் நேர்வழி பெறாதவர்கள் என்கிறான்.

அது போல, சூனியம் உண்மை என்று சொல்கிற நீ, அது போல் எனக்கு செய்து காட்டு என்று அவனை நோக்கி சொல்லப்படும் போது அதை செய்து காட்டாமல் சால்ஜாப்பு சொல்லி ஒடுவானேயானால் அவன் தான் அல்லாஹ் சொல்கிற பொய்யன், அவன் தான் நேர்வழி பெறாதவன், அவன் தான் வாயடைத்து போனவன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக